தயக்கம், தாமதம் நல்லதல்ல!


இலங்கையின் பிரதான தேர்தலொன்று தொடர்பில், வடக்கு- கிழக்குத் தமிழர்கள் மத்தியில் இன்று உள்ளதைப் போன்ற திரிசங்கு நிலைமையொன்று கடந்த காலத்தில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

ஜனாதிபதித் தேர்தலாகட்டும், இல்லையேல் பாராளுமன்ற பொதுத் தேர்தலாகட்டும்... வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலத்தில் நிலைமை வேறுவிதமாகவே இருந்தது.

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் உறுதியான நிலைப்பாடொன்று வந்து விடுவார்கள். ஆனால் அவர்கள் மத்தியில் கடந்த காலத்தில் தேர்தல் நிலைப்பாடு பெரும்பாலும் சுயமானதாக இருந்ததில்லை.

விடுதலைப் புலிகள் அங்கு செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் புலிகளின் நிலைப்பாடுதான் தமிழர்களின் முடிவில் பிரதிபலித்தது. புலிகள் தங்களது நிலைப்பாட்டை தமிழ் மக்கள் மத்தியில் திணித்தனர் என்று கூட கூற முடியும். புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள் ஒருபோதுமே சுயமான முடிவுக்கு வந்ததில்லை. புலிகள் அவ்வாறு அனுமதித்ததும் இல்லை. 2005 இல் வடக்கு மக்களை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க விடாமல் தடுத்ததும் புலிகளின் தனிப்பட்ட முடிவுதான்.

புலிகள் இயக்கத்தின் முடிவுக்குப் பின்னர் காட்சிகள் மாற்றமடைந்தன. தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்தது. புலிகளின் ஆசீர்வாதத்துடன் அரசியல் சக்தியாக செல்வாக்குப் பெற்றிருந்த தமிழ்க் கூட்டமைப்பிடம் ‘முடிவெடுக்கும் பாத்திரம்’ தானாகப் போய்ச் சேர்ந்தது.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையே அங்குள்ள தமிழ் மக்கள் வெளிப்படுத்தினர். 2015ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையும், அதே வருடத்தில் ஓகஸ்ட் மாதம் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலையும் இதற்கான உதாரணங்களாகக் கூறலாம். தமிழ்க் கூட்டமைப்பின் முடிவுக்கு அமையவே அங்குள்ள தமிழர்கள் மைத்திரி_ ரணில் கூட்டணிக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தனர்.

தமிழர்களின் கடந்த கால முடிவை தவறென்று கூறுவதற்கில்லை. ஏனெனில் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் தமிழ்க் கூட்டமைப்பினராவர். தமிழ்க் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு இசைந்து செல்ல வேண்டிய கடப்பாடு தமிழர்களுக்கு இருந்தது. அதேசமயம், குறித்த சமூகமொன்றைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் பிரதிநிதிகளுக்கும் பெரும் பொறுப்பு இருக்கின்றது. மாறிவரும் அரசியல் நிலைவரங்களுக்கேற்ப, தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்குண்டு.

தமிழ்க் கூட்டமைப்பின் கடந்த காலத் தேர்தல் நிலைப்பாடுகளையும் தவறென்று கூற முடியாது. தமிழினத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், ஆறு தசாப்த காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து வருகின்ற இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டி விடலாமென்று நம்பியுமே தமிழ்க் கூட்டமைப்பினர் காலத்துக்குக் காலம் வேறுபட்ட தேர்தல் நிலைப்பாடுகளுக்கு வந்திருந்தனர்.

தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு தமிழ் மக்கள் இசைந்து செயற்பட்டது தொடர்பாக ஏனைய இன மக்கள் கூட தமிழினத்தின் அரசியல் ஒற்றுமையை அன்று பாராட்டியிருந்தனர்.

இவையெல்லாம் எமது கடந்தகால அனுபவங்களாகும். தேர்தலொன்று அறிவிக்கப்பட்டவுடன் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டையே நாட்டின் ஒட்டுமொத்த சமூகங்களும் உற்று நோக்குவது வழமை. அம்மக்களின் முடிவை சர்வதேசம் கூட உற்று நோக்குவதுண்டு. அத்தேர்தல்களின் போதெல்லாம் தமிழ்க் கூட்டமைப்பின் முடிவும், தமிழர்களின் தீர்மானமும் வெவ்வேறானதாக இருந்ததில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் முடிவுக்காகவே தமிழர்கள் காத்திருந்த காலமொன்றும் அன்றிருந்தது.

அன்றைய நிலைமையை இன்றைய தேர்தல் சூழலுடன் ஒப்பிட முடியாதிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் பன்னிரண்டு நாட்களே மீதமிருக்கின்றன.

இவ்வேளையில் தமிழரசுக் கட்சியிடமிருந்து உத்தியோகபூர்வமாக நேற்று முடிவு வெளியாகியுள்ளது.இது தமிழரசுக் கட்சியின் முடிவு. தமிழ்க் கூட்டமைப்பின் முடிவு அல்ல. தமிழரசுக் கட்சியின் முடிவு மிகத் தாமதமாகவே வந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, வடக்கு, கிழக்குத் தமிழர்கள் மத்தியில் தேர்தல் தொடர்பாக வெளிப்படையான பிரதிபலிப்பைக் காண முடியாதிருக்கின்றது. தமிழர்களின் தேர்தல் களம் களையிழந்து போய்க் கிடக்கின்றது. அவர்களது தேர்தல் நிலைப்பாட்டை இன்னுமே உறுதியாகப் புரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது.

தமிழ்க் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் முடிவு ஒருபுறமிருக்க, தேர்தல் தொடர்பான தமது உறுதியான நிலைப்பாட்டை தமது மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய அரசியல் கடப்பாடும், தார்மிகப் பொறுப்பும் தமிழ்க் கூட்டமைப்புக்கு உண்டு. அதுவே அரசியல் அறம்!

தமிழ்க் கட்சிகள் இணைந்த பொதுஅமைப்பான தமிழ்க் கூட்டமைப்பின் முடிவுதான் இங்கு முக்கியம்.இப்பொறுப்பில் இருந்து தமிழ்க் கூட்டமைப்பினால் ஒருபோதுமே நழுவி விட முடியாது. அவ்வாறு நழுவிக் கொள்ள தமிழ்க் கூட்டமைப்பு முற்படுமானால், தமிழர்களின் ஏகபிரதிநிதிகளுக்கான பொறுப்பை அதன் தலைவர்கள் நிறைவேற்றத் தவறியுள்ளனர் என்றுதான் அர்த்தம்! அதேவேளை ஏகபிரதிநிதிகளென்று இனிமேல் கூறிக் கொள்வதிலும் அர்த்தம் இருக்கப் போவதில்லை.

தமிழ்க் கூட்டமைப்பின் தாமதமான செயற்பாடுகள் உசிதமானவையல்ல.ஒட்டுமொத்த தமிழ்க் கூட்டமைப்பின் முடிவை தாமதமின்றிஆணித்தரமாகக் கூற வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. தமிழ்க் கூட்டமைப்பின் தாமதமானது நழுவல் போக்காகுமென்று தமிழினம் சந்தேகம்கொள்ள இடமளிப்பது முறையல்ல!