கொழும்பு நகர வளிமண்டலத்தில தூசு

கொழும்பு நகரத்திற்கு மேலுள்ள வளிமண்டலத்தில் காணப்படும் தூசு துகள்களின் அளவு 100சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள, வளியின் தர கண்காணிப்பு கருவியின்படி, கடந்த செவ்வாய்க்கிழமை, வளி தர சுட்டி (AQI) 167என காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது இன்றையதினம் (06) முற்பகல் 8.30மணியளவில் 173ஆக மேலும் அதிகரித்து பதிவாகியுள்ளதோடு, முற்பகல் 10.00மணியளவில் 165ஆக காணப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிவிப்புக்கு அமைய, சாதாரணமான வளியின் தர சுட்டி 50ஆக காணப்பட வேண்டும் என்பதோடு, இது தற்போது 100வீதமாக அதாவது இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
புது டில்லியில் ஏற்பட்டுள்ள வளி மாசுபாடு நிலைமை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக, சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி இது தொடர்பில் தெரிவித்தார்.
NBRO இனதும் அமெரிக்க தூதரகத்தினதும் வளி சுட்டி அளவிடும் கருவியில் நேற்று முதல் குறிப்பிடும்படியான மாற்றம் காணப்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
விசேடமாக கொழும்பிற்கு மேலுள்ள வான் பரப்பில் நேற்று முதல் பனிமூட்டமான நிலை நிலவுகின்றதாகவும், இவ்வாறு காணப்படுவது தூசுத் துகள்கள் என, விஞ்ஞானி சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.