ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு


மன்னார் - தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா செட்டிக்குளம் நோக்கி வாக்களிப்பதற்காக பேருந்தில் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.துப்பாக்கிச்சூட்டில் சேதமடைந்த பேருந்து

யுத்தக் காலத்தில் வவுனியாவிலிருந்து புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் சிலரே இந்த பேருந்தில் பயணித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

செட்டிக்குளத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

"முதலில் கல்வீச்சு தாக்குதல் நடத்திய பிறகு துப்பாக்கிச்சூடு நடத்திய துப்பாக்கிதாரியால் வாக்காளர்களை ஏற்றிச்சென்ற குறைந்தது இரண்டு பேருந்துகள் சேதமடைந்ததன" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி முகமை கூறுகிறது.

அதுமட்டுமின்றி, பேருந்துகள் சென்றுகொண்டிருந்த சாலையில் டயர்களை எரித்து தாக்குதலாளிகள் இடையூறு ஏற்படுத்தியதாகவும், பின்பு சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் சாலையை சரிசெய்து, வாக்காளர்களை ஏற்றிச்சென்ற பேருந்துக்கு வாக்குச்சாவடி வரை பாதுகாப்பு அளித்ததாக ஏஎஃப்பி செய்தி முகமையின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்த விசாரணையை தந்திரிமலை மற்றும் செட்டிக்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 Comments:

Post a Comment