புதிய வாக்காளர் இடாப்புக்கமையவே பொதுத் தேர்தல்



2019 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, 2020 ல் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் புதிய வாக்காளர் இடாப்புக்கமையவே நடத்தப்பட விருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் 2018 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்புக்கமையவே நடத்தப்பட்டது. அதன்போது வாக்காளர் இடாப்பு உறுதிப்படுத்தப்படும் போது சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் புதிய வாக்காளர்கள் உள்வாங்கப்படலாமென அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனவரி 24ல் புதிய வாக்காளர் இடாப்பை உத்தரவாதப்படுத்தி கையொப்பமிட்டதையடுத்து மொத்த வாக்காளர் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.



அதனையடுத்து மாவட்ட மட்டத்தில் காணப்படக்கூடிய வாக்காளர்களின் தொகைக்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சமப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 196 பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை 25 மாவட்டங்களிலும், மாவட்ட வாக்காளர் எண்ணிக்கைக்கமைய சமநிலையை பேணும் விதத்தில் மறுசீரமைக்கப்படும். இந்த சமப்படுத்தல் நடவடிக்கையின்போது 2015ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாவட்ட மட்டத்தில் காணப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சிறிய மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவும் ஆணைக்குழுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

0 Comments:

Post a Comment