இந்த அரசாங்கத்தின் வரிச் சலுகையால் அதிக நன்மை முஸ்லிம் வர்த்தகர்களுக்கே- நிமல் சிறிபால



முஸ்லிம் மக்களே இந்நாட்டின் வர்த்தகத் துறையில் பெருமளவு ஈடுபட்டுள்ளதாகவும், அரசாங்கம் தற்போது வழங்கியுள்ள வரிச் சலுகையின் பிரதிபலன்கள் அவர்களையே அதிகளவில் போய்ச் சேர்வதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால், தமிழ், முஸ்லிம் மக்கள் தற்போதைய அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுவது அவசியமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலைப் பார்க்கும் போது எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் 125 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் நிலையிலுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் மத நல்லிணக்கம் நாட்டிற்கு மிக அவசியமாகும். தேசிய நல்லிணக்கமும் மத நல்லிணக்கமும் இல்லாவிட்டால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. ஏனெனில் நாம் கட்டியெழுப்பும் அனைத்தும் சில கணங்களில் மாற்றமடையலாம். அதனால் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை நாம் ஆக்கபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலையடுத்து ஜனாதிபதி ஆற்றிய கன்னி உரையில் தமிழ், முஸ்லிம் மக்களை வெற்றியின் பங்காளர்களாக தாம் அழைத்தபோதும் அவர்களிடமிருந்து எதிர்பார்த்த பங்களிப்பு கிடைக்கவில்லையென்று தெரிவித்திருந்தார்.

தற்போது அதற்கான காலம் கனிந்துள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை அவர் பெற்றுக்கொடுப்பார். நாட்டில் மீண்டும் குண்டுகள் வெடிக்காது.

இதனால் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது தவறான கருத்துக்களை புறந்தள்ளி நாமனைவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமானதாகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். (மு)

0 Comments:

Post a Comment