சீனாவுக்கு வெளியில் புதிய கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை அதிகரிப்பு


ஈரானில் 6 பேர் உயிரிழப்பு: தென் கொரியாவில் தீவிரம்
புதிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை சீனாவில் அதன் மையப் பகுதிக்கு வெளியில் நேற்று பெரும் விழ்ச்சி கண்டுள்ளது. எனினும் இது பற்றி தற்போது ஒரு முடிவுக்கு வர முடியாதிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அதிகாரிகள், சீனாவுக்கு வெளியில் இந்த வைரஸ் தீவிரம் அடைவது குறித்தும் எச்சரித்துள்ளனர்.

முந்திய தினத்தை விடவும் அதிகபட்சமாக 648 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவானபோதும் வைரஸின் மையப் பகுதியான ஹுபெய் மாகாணத்திற்கு வெளியில் வெறும் 18 பேருக்கே புதிதாக வைரஸ் தொற்றி இருப்பதாக சீன சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த வைரஸ் தொடர்பில் தரவுகளை வெளியிட ஆரம்பித்தது தொடக்கம் வைரஸ் மையப்பகுதிக்கு வெளியில் மிகக் குறைவானோருக்கு நோய் தொற்று பதிவாகி இருப்பது இது முதல் முறையாகும்.

எனினும் மக்கள் விழிப்புடன் இருக்கும்படியும் கூட்டங்களை தவிர்க்கும்படியும் சீன அரச தொலைக்காட்சி மக்களை அறிவுறுத்தியுள்ளது.

எனினும் சீனாவுக்கு வெளியில் புதிய கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்திருப்பது குறித்து உலக சுகாதார நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது.

தென் கொரியாவில் இந்த வைரஸினால் நேற்று நான்காவது உயிரிழப்பு பதிவானதோடு புதிதாக 123 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்குள் வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகி மொத்தம் 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி மற்றும் பிரான்ஸிலும் நிலைமை மோசமடைந்திருப்பதோடு வைரஸ் தொற்றிய சம்பவங்கள் கடந்த சனிக்கிழமையாகும்போது நான்கு மடங்காக அதிகரித்து 79 ஆக பதிவாகியுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானில் கடந்த சனிக்கிழமை 27 புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டதோடு ஈரானில் புதிதாக 10 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதன்மூலம் ஈரானில் மொத்த 29 பேருக்கு புதிய வைரஸ் தொற்றி இருப்பதோடு கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

புதிய கொரோனா வைரஸினால் 2,400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் சீனாவுடன் தொடர்புடைய 13 ஆபிரிக்க நாடுகள் உட்பட நோய் பாதிக்கும் ஆபத்து உள்ள நாடுகளுக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் சீனாவுக்கு வெளியில் இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு பயணம் மற்றும் நோய் தொற்றியவருடன் தொடர்பு போன்ற சீனாவுடன் தெளிவான தொடர்பு இன்றி இந்த வைரஸ் பரவி வருவது அதிகம் கவலைக்குரியதாகும் என்று அந்த அமைப்பு சுட்டிக்கட்டியுள்ளது.

கொவிட்–19 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வைரஸ் சீன பெரு நிலத்திற்கு வெளியில் சுமார் 26 நாடுகள் மற்றும் பகுதிகளில் பரவி இருப்பதோடு ஒரு டஜனுக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸினால் உயிரிழப்பவர்கள் 2 வீதமே பதிவாகி இருப்பதோடு வயதானவர்களிடமே அதிகம் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. சிறுவர்களின் உயிரிழப்பு மிகக் குறைவாகவே பாதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.ரியாதில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் சந்திப்பில் புதிய கொரோனா வைரஸ் பொருளாதாரத்தில் ஏற்படுத்தி இருப்பும் தாக்கம் பற்றி அதிகம் அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சீன பொருளாதார வளர்ச்சியில் இது வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத் தலைவர் குறிப்பிட்டார்.

இதில் தென் கொரியாவில் டெகு என்ற தேவாலயத்துடன் தொடர்புபட்டே பாதிக்கும் அதிகமான கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த தேவாலயத்திற்கு வைரஸ் தொற்றிய ஒருவர் பிரார்த்தனையில் பங்கேற்ற நிலையில் ஏனையவர்களுக்கும் வைரஸ் தொற்ற ஆரம்பித்துள்ளது.

மறுபுறம் கொரோனா வைரஸ் தாக்கி ஜப்பான் கடற் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமன்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் வைரஸ் தொற்றிய பெண் ஒருவரை விடுவித்தது தொடர்பில் ஜப்பான் சுகாதார அமைச்சர் சனிக்கிழமை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இந்தக் கப்பலில் இருந்த 600க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஜப்பானுக்கு வெளியில் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட சம்பவமாகவும் இது இருந்தது.

இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டபோதும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கொவிட்–19 வைரஸ் தொற்றால் இத்தாலியில் இருவர் பலியானதைத் தொடர்ந்து, நோய் பரவியுள்ள இடங்களில் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அனுமதி பெறாதவர்கள் நோய் பரவியுள்ள இடங்களுக்குச் செல்ல முடியாது. இத்தாலியின் வடக்குப் பகுதியில் வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அங்கு சுமார் 79 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொண்டன. பாதிக்கப்பட்ட வட்டாரத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதுடன் பொது நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட லோம்பார்டி, வெனெட்டோ பகுதிகள் இத்தாலியின் அதிமுக்கியத் தொழிலியல் வட்டாரங்களாகும். அவை அந்நாட்டின் மொத்த உள்நாட்டு ஏற்றுமதியில் 30 வீதம் பங்கு வகிக்கின்றன.

கடந்த மாதம் இரண்டு சுற்றுலாப்பயணிகளுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் இத்தாலி சீனாவுக்குச் சென்றுவரும் அனைத்து விமானங்களையும் நிறுத்தியது. இதேவேளை ஈரானில் இந்த வைரஸ் தொற்றிய ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மாகாணங்களில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கலாசார மையங்கள் மூடப்பட்டுள்ளன.

சீன நாட்டு தொழிலாளர்களால் ஈரானில் இந்த வைரஸ் தொற்றி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

0 Comments:

Post a Comment