பள்ளிவாசல்களில் தொழுகை : விதிமுறை விபரங்கள் இதோ..!


மத வழிபாடுகளில் ஈடுபட எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபடுவது தொடர்பான சுற்று நிருபம் இன்று வெளியிடப்படும் என வக்பு சபை தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.

மத வழிபாடுகளுக்காக பள்ளிவாசல்களை மீண்டும் திறக்கும்போது பின்பற்றவேண்டிய ஒழுங்கு விதிகள் தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் மத வழிபாடுகளில் ஒன்றுகூடல்கள் மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளை மேற்கொள்ளவேண்டாம் என அறிவித்திருந்தது.

தற்போது நிலைமை ஓரளவு சுமுக நிலைக்கு திருப்பி வருகின்றதை கருத்திற்கொண்டு எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் மத வழிபாடுகளில் ஈடுபட அரசாங்கம் அனுமதியளித்திருக்கின்றது.

அதன் பிரகாரம் முஸ்லிங்களுக்கு பள்ளிவாசல்களில் தொழுகைகளில் ஈடுபட இதனூடாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட சுற்றுநிருபம் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடுவோம்.

சுற்று நிருபம் சகல பள்ளிவாசல்களுக்கும் நாளை முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் விசேடமாக ஒரே தடவையில் 30 பேருக்கு தொழுகையில் ஈடுபட இடமளிக்கப்படும்.

அத்துடன் ளுஹர் (நண்பகல் தொழுகை) தொழுகை முதல் இஷா தொழுகை வரை பள்ளிவாசல்கள் திறந்திருக்கும். சுபஹ் தொழுகைக்கான அதானுக்கு 15 நிமிடத்திற்கு முன்னர் பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு, 45 நிமிடங்களின் பின்னர் மூடப்படும். மீண்டும் ளுஹர் தொழுகைக்கு 15 நிமிடத்திற்கு முன்னர் திறக்கப்படும் பள்ளிவாசல்கள் இஷா தொழுகை வரை திறக்கப்பட்டு, 45 நிமிடத்தின் பின்னர் மூடப்பட வேண்டும். சுகாதார தரப்பினால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாடு முழுவதும் உள்ள சகல பள்ளிவாசல்களையும் திறக்க அனுமதி வழங்கப்படும்.

மேலும் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட அனுமதி வழங்கப்படுகின்றபோதும் கூட்டுத் தொழுகைக்கோ ஜூம்ஆ தொழுகைக்கோ அனுமதி இல்லை. தனித்தனியாக சமூக இடைவெளியை பேணித் தொழு வேண்டும். அங்கத்தூய்மை (வுளூ) செய்யும் பிரதேசம் (நீர்தாங்கி) மூடப்பட வேண்டும்.

குறிப்பாக அரசாங்கம் வழங்கியுள்ள இந்த சலுகையை மீறி கட்டுப்பாடின்றி செயற்பட்டால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். அதனால் இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் சுகாதார தரப்பினால் வழங்கப்படும் வழிகாட்டல்களுக்கு அமைய இந்த ஒழுங்குவிதிகளில் மாற்றம் ஏற்படலாம்.வக்பு சபையின் வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.

0 Comments:

Post a Comment