வெலிகமவில் 2 மாத குழந்தை தகனம் - வீடியோ (நடந்தது என்ன..? முழு விபரம் இணைப்பு)வெலிகமை மலாப்பலாவ பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இரண்டுமாதக் கைக் குழந்தையொன்று நேற்றிரவு (14.01.2020) மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.
இதன் உண்மைத்தன்மை மற்றும் குறித்த குழந்தையின் மரணம் தொடர்பாக லங்கா நெட் நிவ்ஸ் தேடலை மேற்கொண்டது.

குறித்த குழந்தை மரணமடைய முன் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்றில்லை என்று உறுதியாகியுள்ளது. என்றாலும் மரணித்ததன் பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த குழந்தை மரணமடையும்போது குழந்தையின் தாய் அருகில் இருக்கவில்லை. தாய்க்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியாகிய காரணத்தால் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் நிலையமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த தாய் கர்ப்பிணிக் காலத்தில் நீரிழிவு நோய் காரணமாக சிகிச்சையின் பொருட்டு இன்சுலின் தடுப்பூசி பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு அதன் பக்க விளைவாக இதயத்தில் துளை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தை கிடைத்ததும் முதல் வாரம் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆரம்ப கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

சிகிச்சையின் பின்னர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியரின் ஆலோசனையின் பெயரில் கொழும்பிற்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொழும்பில் பிள்ளையை பரிசோதித்த டாக்டர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“பிள்ளையின் இதயத்தில் துளைகள் காணப்படுகின்றன. அதற்கான சிகிச்சையை தற்போது வழங்க முடியாது. பிள்ளைக்கு ஐந்து வருடங்களாகிய பின்னரே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதுவரை பிள்ளையின் உயிருக்கு உத்தரவாதமில்லை. எனவே உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு அதுவரை சிகிச்சையை மேற்கொள்ளவும். சில சந்தர்ப்பங்களில் அத்துளைகள் ஐந்து வயதாகும்போது மறையலாம்.”

மேலும் குறித்த டாக்டர் தற்போதைய சூழ்நிலையில் தாய் மற்றும் குழந்தையின் மாதந்த சிகிச்சைக்காக மாதாந்தம் கொழும்பிற்கு வருவது கடினம் என்பதால் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை மூலம் சிகிச்சை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இதன்படி முதலாவது மாத சிகிச்சைக்காக மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் தாய்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்றாலும் தந்தைக்கும் குழந்தைக்கும் தொற்று உள்ளமை உறுதியாகவில்லை. எனவே தாயை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பியுள்ளதுடன் பிள்ளையை பரிசோதித்த பின்னர் தந்தையுடன் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அத்துடன் வெலிகம சுகாதாரப் பிரிவால் குறித்த வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தாயைப் பிரிந்த குழந்தைக்கு தாய்ப்பால் இன்மையால் புட்டிப்பாலே புகட்டப்பட்டுள்ளது. இதனால் அக்குழந்தைக்கு சில நாட்களில் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.

உடனே வெலிகம வாலான ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு போய் மேலதிகச் சிகிச்சைக்காக அங்கிருந்து அம்பியுலன்ஸ் மூலம் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு வைத்தியசாலைக்கு உள்ளெடுக்க முன் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை. அடுத்த கட்டமாக குழந்தைக்கு மேற்கொண்ட சிகிச்சை தோல்வியடையவே நேற்றிரவு (14.01.2021) குழந்தை இறந்துள்ளது.

அதன்பின்னர் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.குறித்த குழந்தையின் ஜனாஸா இன்றிரவு (15.01.2021) தகனம் செய்யப்பட்டது.

குழந்தை மரணிக்க சில மணிநேரங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக உள்ளெடுக்க மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. ஆனால் சிகிச்சை தோல்வியுற்று மரணித்ததன் பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இவ்வாறு மரணித்ததன் பின்னர் அதிலும் வெறும் சில மணிநேரங்களில் வெவ்வேறு விதமாக கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவருவதன் மர்மம் என்ன? குறித்த குழந்தைக்கு சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்களினால் குழந்தைக்கு கொரோனா பரவியுள்ளதா? அல்லது மேற்கொண்ட தவறான சிகிச்சையை மறைப்பதற்கு கொரோனாத் தொற்று எனக் குறிப்பிட்டு எரிக்கப்பட்டுள்ளதா? நீதியான விசாரணைகள் மேற்கொண்டால் உண்மைகள் வெளிவரும்.

0 Comments:

Post a Comment