தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனரில் பங்குபற்றும் சப்ரின், வக்ஷான்
| June 16, 2025

தாய்லாந்தில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 8 மெய்வல்லுனர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் 4 வீரர்களும், 4 வீராங்கனைளும் இடம்பெற்றுள்ளனர். இதில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டி நிகழ்ச்சியில் முன்னாள் தேசிய சம்பியனான சப்ரின் அஹமட் மற்றும் அண்மைக்காலமாக ஆண்களுக்கான நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற முதலாவது மெய்வல்லுனர் திறன்காண் போட்டியில் 15.68 மீற்றர் தூரத்தையும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2ஆவது மெய்வல்லுனர் திறன்காண் போட்டியில் 16.35 மீற்றர் தூரத்தையும் சப்ரின் அஹமட் பதிவு செய்தார். இதன் மூலம் தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டார். இவர் இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.