உணவுக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம் - காசா சிறுவன் உருக்கம்
| June 20, 2025
கடந்த ஒன்றரை வருடங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் மோதல் இடம்பெற்று வருகின்றது.
இந்த தாக்குதல்களில், இதுவரை 55,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
இலட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் காசாவுக்குள் எந்தவிதமான உணவு மற்றும் உதவி பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
அதேநேரம், கடந்த வாரம் உணவுப் பொருட்களைப் பெற வந்த மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், காசாவில் நாளுக்கு நாள் உணவு மற்றும் மருந்துக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில்,
"காசாவில் நாங்கள் உணவு இல்லாமல் மண்ணை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றோம்
ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய வாகனங்கள் காசாவுக்குள் வருகின்றன. ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.
நாங்கள் உணவு இல்லாமல் மண்ணை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை,எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள், தயவுசெய்து கருணை காட்டுங்கள், எங்களிடம் உணவு இல்லை, நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம், உணவு இல்லாமல் மண்ணை சாப்பிடுகிறோம், எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்” என காசாவில் உள்ள சிறுவன் ஒருவன் வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.