Posted by tahaval on October 26, 2019

மணப்பாறை சுஜித் சம்பவமே இறுதியாக இருக்க வேண்டும்
ஆழ்துளை கிணறுகள் அமைப்பு மற்றும் பயன்பாட்டை வரைமுறைப்படுத்த வேண்டும்
- எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்*
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுர்ஜித் வில்சன், வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, பயன்பாடற்று திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து, கடந்த 20 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கி தவித்து வரும் செய்தி மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது.
குழந்தையை மீட்க மீட்பு படைகள் பல மணி நேரங்களாக தொடர்ந்து முயன்று வரும் நிலையில், மீட்புப் பணிகளின் ஒவ்வொரு நகர்வும் ஒட்டுமொத்த மக்களால் உற்று நோக்கப்படுகின்றது. குழந்தை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரார்த்தனையிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி பங்குகொள்கிறது.
இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறிவிழும் சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்துள்ள போதும், பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூடுவது தொடர்பான விழிப்புணர்வுகள் இன்னும் போதிய அளவில் மக்களை சென்றடையவில்லை என்பதையே குழந்தை சுஜித்திற்கு தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் உணர்த்துகின்றது. ஆகவே, தமிழக அரசு இதுபோன்ற ஆழ்துறை கிணறுகளை உடனடியாக பாதுகாப்பாக மூடும் வகையிலான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அதோடு, ஆழ்துளை கிணறுகளில் தவறிவிழும் குழந்தைகளை எளிதில் மீட்கும் வகையிலான கருவிகளை உருவாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் அளப்பெரும் சாதனைகளை நிகழ்த்திவரும் நாம், ஆழ்துளை கிணறுகளில் தவறிவிழும் குழந்தைகளை மீட்கும் கருவிகளை பல படிப்பினைகளை கண்ட பிறகும் கண்டறியாதது பின்னடைவே ஆகும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் அதற்கான முயற்சிகளை உடனடியாக துவக்க வேண்டும்.
ஆழ்துளை கிணறுகளில் தவறி விழுந்து 20 மணி நேரத்துக்கும் மேலாக போராடிவரும் குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அரசு இன்னும் வேகமான நடவடிக்கைகளை துவக்க வேண்டும். சுஜித் சம்பவமே இதுபோன்ற சம்பவங்களின் இறுதியாக இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே துவக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் அமைப்பதையும், அதன் பயன்பாட்டையும் ட்வரமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read more »